ஸ்ரீசைலம் ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

Source: Dinamalar

Updated : பிப் 22, 2024 03:24 | Added : பிப் 22, 2024 03:22 …

ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலில் இன்று (21.02.2024) காலை 9:45 மணிக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் திருக்கரங்களால் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணியளவில், கிழக்கு சன்னிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்திற்கு, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீசத்யநாராயணா ஐஏஎஸ், செயல் அலுவலர், ஸ்ரீபெத்த ராஜு, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்களின் தலைமையில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளை வரவேற்று, பாரம்பரிய மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். புஷ்பகிரி சுவாமியும் உடன் சென்றார். கும்பாபிஷேகத்திற்கு ஸ்ரீமடத்திலிருந்து ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளை அழைத்துச் செல்லும் முன்னர் அனைத்து அதிகாரிகளும் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வர ஸ்வாமி பூஜையை தரிசித்துக்கொண்டனர் பின்னர் தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டது.

ஸ்ரீமல்லிகார்ஜுனஸ்வாமியின் ஸ்வர்ண சிகரத்தின் உச்சிக்கு நன்கு அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச்சென்று ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் கும்பாபிஷேக சடங்குகளை தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக சடங்குகளை ஸ்ரீகண்டி ராதாகிருஷ்ணா, கோவில் வைதிகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் நடத்திவைத்தனர். சரியாக காலை 9:45 மணியளவில் ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி ஸ்வர்ண கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து, பிறகு பிரதான சன்னதிக்கு இறங்கிச்சென்று, அங்கு ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமிக்கு கலசாபிஷேகம், பூஜைகள் செய்து மற்றும் ஹாரத்தி செய்தார்கள்.

பின்னர், ஸ்ரீப்ரமராம்பா சந்நிதிக்கு சென்று அங்கு அபிஷேகம், பூஜை, ஹாரத்தி ஆகியன செய்தார்கள். பின்னர் வேத ஸ்வஸ்தி மற்றும் குருவந்தன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படிருந்த யாகசாலைக்கு வந்தடைந்தார்கள்.

துணை முதலமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சருமான ஸ்ரீ கோட்டு சத்தியநாராயணா, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீ சத்யநாராயணா, ஸ்ரீசைல தேவஸ்தான செயல் அலுவலர், ஸ்ரீ பெத்தராஜு ஆகியோர் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளுக்கு சன்மானம் சமர்ப்பித்தனர், ஸ்ரீபுஷ்பகிரி சுவாமிகள், காசி ஜங்கம்வாடி பீட சுவாமிகள் மற்றும் ஸ்ரீசைல பீட சுவாமிகளும் உடனிருந்தனர்.

அமைச்சர் அவர்கள் அனைவரையும் வரவேற்று, ஸ்ரீசரனர்கள் மற்றம் மற்ற சுவாமிகளுக்கும் தனது மரியாதையைத் தெரிவித்தார். இது ஒரு தெய்வீக தருணம் என்று குறிப்பிட்ட அவர், அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தார். ஸ்வர்ண கலசத்துடன் புதிதாக புனரமைக்கப்பட்ட சிவாஜி கோபுரம் (வடக்கு) பற்றியும் பேசினார். பின்னர் காசி ஜங்கம்வாடி பீடத்தின் சுவாமிகள், ஸ்ரீ புஷ்பகிரி சுவாமிகள் மற்றும் ஸ்ரீசைல பீட சுவாமிகள், இது போன்ற தெய்வீக நிகழ்வின் முக்கியத்துவம், அனைத்து ராஜகோபுரங்களுக்கும் ஸ்வர்ணகலசத்துடன் கும்பாபிஷேகம் செய்ததன் முக்கியத்துவம் குறித்துப் பேசினர், இதையெல்லாம் குறுகிய காலத்தில் தயார் செய்த அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் குழுவினரின் முயற்சியைப் பாராட்டினர்.

ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் தமது அனுக்ரஹ பாஷனத்தை குருபரம்பரை மற்றும் ஸ்ரீப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமியை ப்ரார்தித்து தொடங்கினார். மொழி, பிரதேசங்கள், கலாச்சாரங்கள், மரபுகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றில் பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை மக்களை ஒருங்கிணைத்தது தர்மம் என்று தனது உரையில் கூறினார். அக்காலத்தில் ஜகத்குரு ஸ்ரீஆதி சங்கராச்சாரியார் எவ்வாறு போது ஸ்ரீசைலத்திற்கு யாத்திரை செய்து, அங்கு காடுகளில் எப்படி தவம் செய்திருப்பார் என்று ஆச்சரியப்பட்டார். 1933 ஆம் ஆண்டு ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் வருகை தந்ததையும், இப்பகுதியில் உள்ள செஞ்சு பழங்குடியினர் ஆசார்யாளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததையும், 1967ல் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் இருவரும் பாத யாத்திரையாக ஸ்ரீசைலம் வந்ததையும் நினைவு கூர்ந்தார்.

ஆந்த்ர தேசமானது திரிலிங்க க்ஷேத்ரம் என்வும் வேத தர்மம், பக்தி, கலாச்சாரம் மற்றும் கலைகள் இப்பகுதியின் தனிச்சிறப்பாகும் என கூறினார்கள். அர்ஜுன வ்ருக்ஷத்தைப் பற்றி கூறிய ஸ்ரீசரணர், மல்லிகார்ஜுனம் மற்றும் தமிழகத்தில் உள்ள, மத்யார்ஜுனம் எனும் கும்பகோணம் சமீபத்திலுள்ள திரு இடைமருதூர் & புடார்ஜுனம் எனும் திருநெல்வேலி சமீபத்திலுள்ள திருப்புடைமருதூர் ஆகிய க்ஷேத்திரங்களைப் பற்றியும் விளக்கினார். கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு அறநிலையத்துறை அமைச்சர் தலைமையிலான ஸ்ரீசைல தேவஸ்தானத்தின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், ஈஸ்வர பக்திக்கு அழைப்பு விடுத்து, அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தார். அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் சாத்ரா மற்றும் பிரசாதம் வழங்கி அனுக்ரஹித்தார்கள். ஸ்ரீவீரையா, ஸ்ரீமார்க்கண்டேய சாஸ்திரி மற்றும் ஸ்ரீபூர்ணாநந்த ஆராத்யுலு ஆகியோருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. ஆந்த்ர ப்ரதேச அறநிலையத்துறையின் ஆகம ஆலோசகர் ஸ்ரீசக்ரபாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஸ்ரீமடத்திற்குத் திரும்பும் முன் வேத பண்டிதர்களுக்கும் மற்ற பக்தர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார். மந்திரி, ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் பிற அதிகாரிகள் ஸ்ரீமடத்திற்கு ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளுடன் சென்று, ஆசி பெற்று விடைபெற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *