Article from Kalki Online- Source: https://kalkionline.com/magazines/deepam/do-you-know-the-connection-between-ayodhya-sri-rama-temple-and-kanchi-city
Published on 14 Dec 2023, 5:33 pm
அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும் காஞ்சி மாநகருக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?
Published on:
வேதங்களை ஆணி வேராகக் கொண்ட சனாதன தர்மத்தின் உயிர் மூச்சு சத்தியம், தர்மம் முதலியனவாம். அத்தர்மத்தினை நிலைநாட்டிடவே வேத நாயகனான மஹாவிஷ்ணு யுகம்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்ததும், எடுக்கப் போவதும், நமது தர்மத்தின் வரலாறு, நம்பிக்கை. பூரண புண்ணிய அவதாரம் என்று போற்றப்படும் இராமாவதாரத்தினை பாரத தேசம் முழுதிலும் உள்ள மொழிகள் அனைத்திலும் போற்றிப் பாடப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. ஸ்ரீமத் வால்மிகி இராமாயணத்திற்கு அடுத்து தமிழ் மொழிக் காவியமான கம்ப ராமாயணம் உலகம் அறிந்த ஒன்று. அதுபோலவே இராமாவதாரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக காஞ்சி மாநகருக்கும் அயோத்தி மாநகருக்கும் புராண, சரித்திர தொடர்புகள் நிறையவே உள்ளன. இந்த இரண்டு நகரங்களுமே மோட்சபுரிகளாகக் கருதப்படுகின்றன.
தசரத மஹாராஜா அயோத்தியில் புத்திரப்பேறு வேண்டி யாகம் முதலியவற்றை தொடங்குவதற்கு முன்னர் காஞ்சி மாநகருக்கு வருகை புரிந்து அன்னை காமாட்சியினை வழிபட்ட வரலாற்றுச் சான்றுகள் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் காணக் கிடைகின்றன. 2500க்கும் கூடுதலான ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரால் தோற்றுவிக்கப்பட்ட ஆம்நாய மடங்களுள் ஒன்றானதும் மூலாம்நாய மடமாக இன்றும் பற்பல சிறப்புகளுடன் செயல்பட்டு வருவதுமான ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ மடத்திற்கும் ஸ்ரீராமனுக்கும் ஸ்ரீராம ஜன்ம பூமிக்கும் சரித்திரத் தொடர்புகள் நிறையவே உண்டு.
அறமே, அதாவது தர்மமே மனித உருவெடுத்து வேத நெறியில் நின்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் பாரத தேசத்தினை ஆண்ட வரலாறே இராம காவ்யம். உபாஸனா மார்கத்தினை, அதாவது உருவ வழிபாட்டினை அறு வகையாக நெறிப்படுத்தி ஒவ்வொரு இறை வடிவிற்கும் உள்ள மந்திரங்களுக்கு இணையாக பல நூற்றுக்கணக்கான தோத்திரப் பாடல்களைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ ஆஞ்சனேயனையும் போற்றி தோத்திரங்கள் தந்துள்ளார். ஸ்ரீமத் ஆதிசங்கரர் தொடங்கி, இன்று வரை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தினை அலங்கரித்த, அலங்கரித்து வருகின்ற மஹான்களான ஸ்ரீபோதேந்திராள், ஸ்ரீ சதாசிவ ப்ரும்மேந்திராள், பூஜ்யஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி மற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் ஸ்ரீராமனை போற்றியும் ஸ்ரீராம நாமத்தை பிரச்சாரம் செய்து வந்ததுடன் ஸ்ரீராம ஜன்ம பூமியில் கோயில் அமைந்திடவும் அரும்பாடு பட்டுள்ளனர்.
ராம் ஜன்ம பூமியில் ராம் மந்திர் அமைந்திட 1980களில், பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி ஸ்ரீராம்லல்லாவுக்கான சரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுத் துணியாலான கொடை, சாமரம் முதலான ஸ்ரீமடம் சார்பான மரியாதைகளை குழந்தை ராமனுக்கு முதலில் அளித்து ஆலயப் பிரவேசம் செய்த சங்கராச்சார்யார் எனும் பெருமையை பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெற்றார்.
இது மட்டுமல்ல, இக்கோயில் விஷயமாக பிரச்னைகள் எழுந்தபோது, தாமே நேரடியாக மதத் தலைவர்களை பலமுறை அழைத்துப் பேசி இரு மதத்தினரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரையும் முழுமனதுடன் ஏற்கும் நிலைக்கு கொணர்ந்த பெருமையும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் சாரும். தம் குருவரர்களின் வழியிலேயே ஸ்ரீராம் மந்திர் ஆலய பூமி பூஜைகள், சாஸ்திர சம்ப்ரதாய ரீதியாக அமைந்திட அனைத்து ஏற்பாடுகளையும், சரித்திர நிகழ்வுகள் குறிக்கப் பெற்ற தங்கம், வெள்ளி தாமிர பட்டயங்கள், தங்கம், வெள்ளி காசுகள் நாணயங்கள், பூமி பூஜைக்கான சாமக்ரியைகள் முதலியன வழங்கிய பெருமையும் பூஜ்யஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் சேரும்.
இத்தகைய புனிதமான ஆன்மிகத் தொடர்புகள், காஞ்சிக்கும் அயோத்திக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்திற்கும் அன்றும் இன்றும் என்றும் தொடருவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
500 ஆண்டுகளுக்கு மேலாகவே பக்தர்கள் உள்ளிட்ட அனைவருமே தவமாய் தவமிருந்து கண்டு வந்த கனவுகள் யாவும் நனவாகும் வகையிலும் ராம ஜன்ம பூமியில் பாரத தேசத்தின் தனிப்பட்ட கலைகளும் கலாசாரங்களும் உன்னத முறையில் பரிமளிக்கும் வகையில் மிக பிரும்மாண்டமான ஆலயம் எழுப்பப்பட்டு உலகமே வியக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவது நமக்கு மிகவும் மகிழ்சியைத் தருகிறது. அதிலும் குறிப்பாக மகத்தானதொரு ஆலயத்தின் மஹிமையைப் போற்றும் வகையிலும் வேத புருஷனுக்கான ஆலயத்தில் வேதங்களை கற்றுத்தெளிந்த வல்லுநர்களைக் கொண்டு விதிப்படி யாக – யக்ஞாதிகள், ஜப – ஹோமங்கள், பாராயணங்கள் என்று அனைத்து வகை பணிகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட 121 வேத பண்டிட்களும் ஆச்சார்யர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள, 86 வயது நிரம்பிய வாரணாசி பண்டிட் லக்ஷ்மிகாந்த் மதுரநாத் தீக்ஷித், ‘ஸ்ருதி-ஸ்ம்ருதி’ எனப்படும் வேத சாஸ்திர விஷயங்களில் அபரிமிதமான ஞானம் கொண்டவராவார். சமீப மாதங்களில், காசி மாநகரில் முகாமிட்டு சாதுர்மாஸ்யம் விரதம் மேற்கொண்டிருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்சொன்ன, ஸ்ரீலக்ஷ்மிகாந்த் மதுரநாத் தீக்ஷித், ஸ்ரீராம் மந்திர் மூலவருக்கு ‘ப்ராணப்ரதிஷ்டை’ எனும் மிக முக்கியமான சாஸ்திர சடங்குகளைச் செய்வதற்கும் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய குமாரர் ஸ்ரீசுனில் லக்ஷ்மிகாந்த் தீக்ஷித்தும் ஒரு வேத விற்பன்னர்.
இவர்கள் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும் சத்ரபதி சிவாஜி மஹராஜுக்கு 1674ல் நடைபெற்ற ராஜ்ய பட்டாபிஷேக விழாவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற பெருமைக்குரியவரான ஸ்ரீ கங்காபட் எனும் காசி நகர அறிஞர் அவர்களின் வம்சாவளியினர் ஆவர். மேலும், காசியில் முகாமிட்டிருந்த காலத்தில்தான், கடந்த செப்டம்பர் மாதத்தில், பூஜ்யஸ்ரீ காஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மேற்சொன்ன தீக்ஷித் உள்ளிட்ட, ஆச்சார்ய கணேஷ்வர சாஸ்திரி த்ராவிட் ஆகியோர் கொண்ட குழுவினை அயோத்திக்கு அனுப்பி அங்குள்ள மிக முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு உகந்த நன்னாளை தீர்மானித்து வரச் செய்தார்கள்.
கும்பாபிஷேக நாள் நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீ காஞ்சி ஆச்சார்ய ஸ்வாமிகளின் வழிகாட்டுதல்படி, பத்து தலைமுறைகளாக காசியில் வசித்து வரும் ஸ்ரீதீக்ஷித் தலைமையில் கும்பாபிஷேக புனிதப் பணிக்கான வேத விற்பன்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரீதீக்ஷித் காசியில் பத்து தலைமுறைகளாக வசித்து வந்தாலும் அவருடைய முன்னோர்கள் மஹாராஷ்ட்ர மாநிலம், சோலாப்பூர் அருகே உள்ள ஜேவூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் வேத சாஸ்திரங்கள் முதலான கலைகளில் ஆச்சார்யர்களாக கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீராம் மந்திர் ஆலய கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற ஸ்ரீசீதாராமனை வணங்கி வழிபடுவதுடன் இப்புனித தருணத்தில் இவ்வாலயம் அமைந்திட அரும் பாடுபட்ட அனைவரையும் அவர்களது தியாகங்களையும் அன்புடனும் நன்றியுடனும் நாம் அனைவரும் நினைவுகூறுவோமாக.