சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம் – 18 Apr. 2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீராமநவமியையொட்டி, 9 நாட்களாக ஸ்ரீவித்யா ஹோமம் நடந்தது. இந்த ஹோமம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று மஹா பூர்ணாஹூதி நடந்தது.
அதை தொடர்ந்து, ராமர், சீதாதேவி, லட்சுமணர், ஹனுமன் விக்ரஹங்கள் யாகசாலையிலிருந்து, ஊர்வலமாக சங்கர மட வளாகத்தில் உள்ள பூஜை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டன.
பூஜை மண்டபத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து, ராமஷடாச்சரி ஹோமம் பூர்த்தியாகி தீபாராதக்குப்பின், ராமர், சீதாதேவி சிலைகள் ஊர்வலமாக மஹா பெரியவா பிருந்தாவனம் முன் உள்ள மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்தார். தொடர்ந்து, பாரிஜாதம், விருட்சி, பன்னீர் ரோஜா, செண்பகம், மனோரஞ்சிதம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலர்களால் புஷ்பாஞ்சலியும் நடந்தது.
ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ராமபுஜங்க பிரயாக ஸ்தோத்திரம் புஷ்பாஞ்சலியின் போது பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையின் துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல். விஸ்வநாதன், டாட்டா கன்சல்டன்சி நிறுவன உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாலையில் வேடல் கிராமத்தில் உள்ள அர்த்தசாஸ்திர பாடசாலையில் பயிலும் மாணவர்களின் சீதா கல்யாண மஹோற்சவமும், நாடகமும் நடந்தது.