ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு
ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சைவ திருத்தலங்களில் முக்கியமானதாக ஸ்ரீ பிரமராம்பிகை சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னின்று நடத்தி வைத்தார்.
முன்னதாக ஸ்ரீசைலம் கிழக்கு சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை தந்த ஸ்ரீ விஜயந்திர சுவாமிகளை மாநில இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சத்யநாராயணா, செயல் அலுவலர், ஸ்ரீபெத்தராஜு, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வரவேற்று, பாரம்பரிய மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் ஸ்ரீ விஜயேந்திரர், கோபுர உச்சிக்கு சென்று கலச பூஜையை தொடங்கி வைத்தார். சரியாக காலை 9.45 மணியளவில் கோயிலின் தங்க கலசத்திற்கு கும்பாபிஷேகமும், தீப ஆராதனையும் நடபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீ விஜயேந்திரர் தனது உரையில், கடந்த 1933-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவர் இக்கோயிலுக்கு வருகை தந்ததையும், அப்போது இப்பகுதியில் வசிக்கும் செஞ்சுபழங்குடியினர் மகா பெரியவரைஉபசரித்ததையும் நினைவுகூர்ந்தார். இதுபோல் 1967-ம் ஆண்டில் மகா பெரியவரும், ஸ்ரீ ஜெயேந்திரரும் இக்கோயிலுக்கு பாத யாத்திரையாக விஜயம் செய்ததையும் நினைவு கூர்ந்தார்.
ஆந்திர தேசமானது திரிலிங்க க்ஷேத்ரம் எனவும் வேத தர்மம், பக்தி, கலாச்சாரம் மற்றும் கலைகள் இப்பகுதியின் தனிச்சிறப்பு எனவும் கூறினார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கோட்டு சத்யநாராயணா மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் அனைவரும் காஞ்சி பீடாதிபதியிடம் ஆசி பெற்றனர்.