ஆக 16, 2023…
குரு, தெய்வம், தேசபக்தி அவசியம்: விஜயேந்திர சுவாமிகள் அருளுரை
காஞ்சிபுரம் : காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வாரணாசி முகாமில், தமிழகத்தில் இருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு, 77வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து, தேசிய கொடி வழங்கி, அவர்களின் நகர்வலத்தை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது: மனிதர்களின் இயல்பான தயை, கருணை, அன்பு, இரக்கம் முதலியவற்றை வளரச் செய்வது தர்மம். நமது தேசத்தில் தர்மம் வளர்வதற்காக பாடுபட வேண்டிய நேரமிது. மக்கள் அனைவருக்கும் குரு பக்தி, தெய்வ பக்தி, தேசபக்தி இம் மூன்றும் அவசியம்.
ஸ்ரீபரமாச்சார்யர்கள், 1947 முதல், சுதந்திர தினத்தன்று அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியதோடு, உண்மையான சுதந்திரம் என்பது தர்மத்தைக் கடைபிடித்து கிடைக்கக்கூடிய ஆன்மிக சுதந்திரமே, என்றார்.
கடந்த 1934ல் தென் இந்தியாவிலிருந்து பூஜை முதலியவைகளுடன் யாத்திரை செய்து காசி மாநகர் அடைந்த ஸ்ரீபரமாச்சார்யாருக்கு, பண்டிட் மதன் மோகன் மாளவியா அளித்த மாபெரும் வரவேற்பை இந்த சுதந்திர திருநாளன்று காசி முகாமில் நினைவு கூறுவதில், நாம் பெருமிதம் கொள்கிறோம்.
அஹிம்சை வழியில் அறம் வளர்த்து அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி தெய்வ பக்தி, தேச பக்தி முதலியவற்றின் துணை கொண்டு, நாடு முன்னேற, நாம் முன்னேற, நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து உழைப்போம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Source: Dinamalar